மின்மோட்டார் ஒயர்கள் திருட்டு

திண்டிவனம், ஜூன் 19: திண்டிவனம் அடுத்த சலவாதி, வட ஆலப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வம், துளசிநாதன் கார்த்திகேயன், ராஜா ராமு, செங்கேணி, மங்கையர்கரசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள கிணற்றில் உள்ள மின்மோட்டாரில் இணைக்கப்பட்ட மின்சார ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் கிணற்றில் உள்ள மின்மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள மின் ஒயர்கள்  திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடந்த 3 நாட்களாக விளைநிலங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்படாமல் இருந்ததால் இதனை பயன்படுத்திக்கொண்ட மர்மநபர்கள் மின்மோட்டாரின் மின் ஒயர்களை திருடி சென்றுள்ளனர். திருடிய ஒயர்களின் உள்ளே இருந்த காப்பர் கம்பிகளை எடுத்துக்கொண்டு பிளாஸ்டிக் ஒயரை அங்கேயே வீசி சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். கடந்த 3 நாட்களாக சலவாதி, வடஆலப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால் நிலங்களில் பல ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் தண்ணீர் இன்றி காய்ந்தன. இதனை கண்ட விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Tags :
× RELATED இப்ப விழுமோ... எப்ப விழுமோ..? முறிந்து விழும் நிலையில் சிக்னல் கம்பிகள்