கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால் கட்டிட பணிகள் முடக்கம்

சின்னசேலம், ஜூன் 19: கள்ளக்குறிச்சி கோட்டத்தில் மணல் தட்டுப்பாட்டால், அரசு வீடுகள் கட்டும் பணி உள்ளிட்ட கட்டிட பணிகள் அடியோடு முடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதி
களில் பொதுமக்கள் தன்னிச்சையாக சொந்த செலவில் வீடு கட்டி வருகின்றனர். அதைப்போல வடக்கநந்தல், சின்னசேலம் பேரூராட்சி பகுதி
யில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 2000 வீடுகள் ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த திட்டத்தில் வடக்கநந்தல் பேரூராட்சியிலும், சின்னசேலத்திலும் சுமார் 750 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், கல்வராயன்மலை ஒன்றியம் பகுதியில் உள்ள கிராமங்களிலும் இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பசுமை வீடுகள், இந்திரா குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மணல் வாங்குவதில் பயங்கர கெடுபிடிகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மாட்டுவண்டி, மோட்டார் சைக்கிளில் மணல் அள்ளுவதுகூட காவல்துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு வீடு கட்டும் திட்டத்தில் அனுமதி பெற்றும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வீடு கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

ஆனால் கச்சிராயபாளையம், கீழ்குப்பம் காவல் எல்லை பகுதியில் உள்ள மட்டப்பாறை ஆறு, கல்பொடை ஆறு, கோமுகி அணை உள்வளாகம், அம்மகளத்தூர் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் இதே காவல்துறைக்கு தெரிந்தே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடக்கிறது. அரசு திட்டத்தில் வீடு கட்டும் நபர்களுக்கு கிடைக்காத மணல் திருட்டு மாபியா கும்பலுக்கு சுலபமாக கிடைக்கிறது. அவர்கள் ஒரு மூட்டை மணல் ரூ.100க்கு விற்கின்றனர். ஒரு டிராக்டர் வண்டி மணலை ரூ10,000க்கு விற்கின்றனர். அதைப்போல மணல் குவாரியில் மணல் வாங்குவது என்பது இந்த பகுதியில் எட்டாக்கனியாக உள்ளது. தற்போது ஒருசில இடங்களில் குவாரிகள் மூடப்பட்டு உள்ளது.  இதனால் சின்னசேலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் மணல் தட்டுப்பாட்டால் தனிநபர் மற்றும் அரசு திட்டத்தில் வீடு கட்டும் பணி அடியோடு முடக்கப்பட்டுள்ளது. அதனால் கூலி மற்றும் கட்டிடத் தொழிலாளர்களுக்கும் தினசரி வேலை என்பது கேள்விக்குறியாகிறது. ஆகையால் மாவட்ட ஆட்சியர் மாற்று ஏற்பாடாக அரசு திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும். குறிப்பாக அரசு ஆணையை காட்டினால் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மணல் கடத்தல், பணம் பறிப்பு: குண்டாசில் 3 பேர் கைது