×

முறையற்ற இணைப்புகளை துண்டிக்க அறிவுறுத்தல் குடிநீர் பிரச்னை அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

விழுப்புரம்,  ஜூன் 19: விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான சிறப்பு  ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி  அலுவலர்கள், பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சிகள் உதவி  இயக்குநர்கள், ஊரகவளர்ச்சி செயற்பொறியாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர்  விநியோகம் தடையின்றி நடைபெறும் வகையில் அனுமதி அளிக்கப்பட்ட பணிகளின்  செயலாக்கம் குறித்து பணிகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. கிராம  ஊராட்சிகளைப்பொறுத்தவரை முன்னேற்றத்தில் உள்ள பணிகளை உதவி இயக்குநர்  நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள்  மற்றும் இதர களப்பணியாளர்கள் கள ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில்  பணிகளை செயல்படுத்தி முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. பொறியாளர்கள்,  பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு  ஊராட்சிகளை பகிர்ந்து ஒதுக்கீடு செய்து தினசரி குடிநீர் விநியோகம்  தடையின்றி நடைபெறுவதை கண்காணித்திடவும், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால்  ஆட்சியரிடம் நேரில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. முறையற்ற குடிநீர் இணைப்புகளை  கண்டறிந்து அவற்றை துண்டிப்பு செய்து அதற்கான அறிக்கையை தினசரி விழுப்புரம்  உதவி இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆட்சியர்  அறிவுறுத்தினார்.

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளை பொறுத்தவரை உதவி  இயக்குநர் மற்றும் நகராட்சி ஆணையர்கள் கட்டுப்பாட்டில் பணிபுரியும் உதவி  செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மற்றும் நகர்ப்புற ஆய்வாளர்களை வார்டுகள்  வாரியாக பொறுப்பு நிர்ணயம் செய்து குடிநீர் பணிகளை விரைந்து முடித்திட  அறிவுரை வழங்கப்பட்டது. இவ்வலுவலர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  வார்டுகளில் தினசரி கள ஆய்வு மேற்கொள்ள செய்து குடிநீர் விநியோகம்  செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்த அறிக்கையை பெற்று பொதுமக்களுக்கு குடிநீர்  தடையின்றி வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளவும், முறையற்ற குடிநீர்  இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிப்பதுடன் அதற்கான தினசரி அறிக்கையினை  விழுப்புரம் ஊராட்சிகள் உதவி இயக்குநருக்கு அனுப்பிவைக்கவும் ஆட்சியர்  உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  மகேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை