×

மரக்காணம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ₹21 லட்சம் முறைகேடு

விழுப்புரம், ஜூன் 19: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.21 லட்சம் முறைகேடு செய்த 4 விற்பனையாளர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைவர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கந்தாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதன்கீழ் பாளையம், எம்.புதுக்குப்பம், குறும்பரம், கந்தாடு உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் இக்கூட்டுறவு கடன் சங்கத்தில் தினமும் நகைக்கடன், விவசாயக்கடன், உரம், விவசாய இடுபொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கந்தாடு கூட்டுறவு கடன் சங்கத்தில் தொடர்ந்து ஊழல், முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து திண்டிவனம் கூட்டுறவு சங்கங்களின் துணைபதிவாளர் பால்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கணக்குகளை தணிக்கை செய்தபோது ரூ.21,64,021 முறைகேடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள், இளநிலை உதவியாளர், சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 11 பேர் சேர்ந்து தினமும் விற்பனையாகும் பொருட்களுக்குரிய பணத்தை அலுவலகத்தில் கட்டாமல் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக பால்ராஜ் விழுப்புரம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் புதுக்குப்பம் நியாயவிலைக்கடை விற்பனையாளர் ராஜேந்திரன்(53), கந்தாடு நியாயவிலைக்கடை விற்பனையாளர் முத்துக்குமார்(50), குறும்பரம் நியாயவிலைக்கடை விற்பனையாளர் ராஜா(56), பாளையம் நியாயவிலைக்கடை விற்பனையாளர் சீனுவாசன்(49) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் பரசுராமன், முன்னாள் சங்க செயலாளர் பாஸ்கரன், எழுத்தர் தரன், விற்பனையாளர் ஆறுமுகம், அலுவலக உதவியாளர் எத்திராஜ், எழுத்தர் தியாகராஜன், சந்தானம் உள்ளிட்ட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதனிடையே முறைகேடு செய்யப்பட்ட பணம் கைதானவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.போலி நகைகளை வைத்து பலகோடி சுருட்டல்?கந்தாடு  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல கோடி மோசடி நடந்திருக்கலாம்  என விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகவே ஊழல்  முறைகேடு இருந்து வருவதாகவும், அவ்வப்போது அந்த பணத்தை திருப்பி  செலுத்தி விடுவதால் தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த மார்ச்  மாதத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின்போது முறைகேடு செய்த பணத்தை திருப்பி செலுத்தாதது  ரியவந்தது. இதனிடையே விவசாயிகளின் பெயரில் போலியான நகைகளை  அடகு வைத்து வங்கியில் பலகோடி பணம் சுருட்டப்பட்டிருக்கலாம் என்ற  அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. வங்கி லாக்கரில் உள்ள நகைகளை ஆய்வு  செய்தால் அதுகுறித்த உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது. எனவே கூட்டுறவு சங்க  அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.வங்கி பணத்தில் வட்டி தொழில் இதுகுறித்து வணிக குற்றப்புலனாய்வு போலீசாரிடம் கேட்டபோது, வங்கியில்  விவசாயிகளின் பெயரில் கடன் வழங்குவது, விற்பனையான பணத்தை வெளியில்  வட்டிக்கு கடன் வழங்கி சைடு பிசினசில் ஈடுபட்டு வந்துள்ளார்களாம். அந்த பணத்தில்  ஊழியர்கள் வீடு, நிலம் வாங்கிபோட்டு செழிப்பான வாழ்க்கை  வாழ்ந்து வந்துள்ளதாகவும், அப்பாவி விவசாயிகள், பொதுமக்கள் பெயரில்  அட்டூழியம் செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.

Tags : Marakkanam ,
× RELATED நிவாரணம் வழங்க வலியுறுத்தி தொழிலாளி சடலத்தை சாலையில் வைத்து மறியல்