×

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில்

மதுரை, ஜூன் 18: தளவாட சாமான்கள் பற்றாக்குறையால் திடக்கழிவு மேலாண்மையில் மதுரை மாநகராட்சி திண்டாடி வருகிறது. கடந்த 9ஆ ண்டுகளாக புதிய வார்டுகள் அலட்சியம் செய்யப்படுகிறது. கூடுதலாக சேகரமாகும் 250 டன் குப்பையை தரம் பிரிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. இதில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகராட்சி 2ம் இடத்தில் இருந்து வருகிறது. குப்பைகள் சேகரித்தல், குடிநீர் வழங்குதல் இந்த இரு பணிகள் மட்டுமே மிக முக்கியமானது. குப்பைகள் அள்ளுவதிலும், பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவதிலும் மதுரை மாநகராட்சி பின்தங்கிய நிலையில் தான் இன்று வரை இருந்து வருகிறது. அதுவும் குப்பைகளை அள்ளிச்சென்று அதனை தரம் பிரித்து சேமிப்பு கிடங்கில் சேமித்து, வெளியற்றப்படும் செயல்களை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சரிவர முடிக்க முடியாமல் மாநகராட்சி திண்டாடி வருகிறது.மதுரை மாநகராட்சியானது விரைவான நகர் மயமாதலினால் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபரில் விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 72 வார்டுகளாக இருந்த மாநகராட்சியானது 17 உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்ததின் மூலம் 28 புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டு 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் 51.82 சதுர கிமீ ஆக இருந்த பரப்பளவு தற்போது 147.997 சதுர கிமீ பரப்பளவாக அதிகரித்து விட்டது.

கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.50 லட்சமாக இருந்த மக்கள் தொகை வார்டு விரிவாக்கத்திற்கு பிறகு 14.71 லட்சமாக உயர்ந்து விட்டது. இது வரை தினமும் 450 டன் குப்பைகளை சராசரியாக அள்ளி வந்த மாநகராட்சிக்கு கூடுதலாக 250 டன் சேர்ந்ததால் மொத்தம் 700 டன் குப்பை நாள் ஒன்றுக்கு சேகரிக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகளை சேகரித்து நகரை சுத்தமாக்கும் பணியில் சுமார் 4000 துப்புரவு பணியாளர்கள் தினமும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.மாநகராட்சியின் திடக்கழிவு பொருட்களை 2ம் நிலை சேகரிப்பதற்காக 150 வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதுதவிர ஒவ்வொரு வார்டிலும் குப்பைகளை சேகரிக்க தனியாக வாகனம் பயன்படுத்தப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ‘பில்டிங் ஸ்டிராங்’, ‘பேஸ் மட்டம் வீக்’ என்ற கதையாக சேகரமாகும் 700 டன் குப்பைகளை தரம் பிரித்து சேமித்து வெளியேற்றப்படும் செயல்களை முடிப்பதற்கு வெள்ளக்கல்லில் தற்போதுள்ள தளவாடங்கள் போதுமானதாக இல்லை.நிறைய தளவாடங்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இதனால் கூடுதலாக சேகரமாகும் குப்பைகளை தரம் பிரிப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. புதிய வார்டுகளை சேர்க்கும் போதே கூடுதலாக குப்பைகள் சேரும் என்பது அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். இருந்தபோதும் புதிய 28 வார்டுகளை கடந்த 9ஆண்டுகளாக மாநகராட்சி அலட்சியம் செய்து வருகிறது.

இழுத்தடிப்பு: இயற்கை ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘‘திடக்கழிவு மேலாண்மையில் இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தியபோதே கூடுதல் தளவாடச் சாமான்களை வாங்காமல் இத்தனை ஆண்டுகள் மாநகராட்சி அலட்சியமாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கப்பட்ட புத்தகத்தில் மட்டுமே பல கோடி செலவில் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளாகவே இழுத்தடிக்கின்றனர்’’ என்றனர்.மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘அனைத்து பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் ரூ.247.50 கோடி மதிப்பீடு அறிக்கை தயார் செய்துள்ளோம். இந்த அறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தவுடன் மத்திய பொதுசுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்புகள் வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி சுகாதாரப் பணியில் மாநகராட்சி சிறப்படையும்’’ என்றார்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை