சாமி கும்பிட இடைஞ்சலாக உள்ளது இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்

பழநி, ஜூன் 18: பழநி திருஆவினன்குடி கோயிலில் உள்ள விநாயகருக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலுக்கு வருவர். இக்கோயிலில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வரும் இடத்தில் கன்னி மூலை பகுதியில் விநாயகர் சிலை உள்ளது. இதனைத்தொடர்ந்து வெளிப்பிரகாரத்தில் நக்கீரர், அருணாச்சலேஸ்வரர், சனிபகவான், துர்க்கைஅம்மன், மீனாட்சி அம்மன் சிலைகளும் உள்ளன. ஆனால், கோயிலின் நுழைவாயிலில் பக்தர்கள் வலம் வரும் இடத்தில் உள்ள குறுகிய இடத்தில் விநாயகர் சிலை உள்ளது.

Advertising
Advertising

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலின் விநாயகர் சிலைக்கு முன்புறம் தடுப்பு கட்டை வைத்தனர். அப்போதே பக்தர்கள் கோயிலை வலம் வருவதற்கு இடைஞ்சலான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது விநாயகர் சிலையைச் சுற்றி கம்பி தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால் பக்தர்கள் அவ்வழியே நடந்துகூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முகூர்த்தநாட்களில் திருஆவினன்குடி கோயிலில் தான் அதிகளவு திருமணங்கள் நடைபெறும். ஆனால், தற்போது விநாயகர் சிலையை சுற்றி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டிருப்பதால் அப்பகுதியில் கடும் இடைஞ்சலான நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்புக் கம்பிகளை அகற்றி, பக்தர்கள் கோயிலை சுற்றி வலம்வருவதற்கு கோயில் நிர்வாகம் வசதி செய்து தர வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: