நெடுஞ்சாலைத்துறை அதிரடி கொடைக்கானலில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கொடைக்கானல், ஜூன் 18: கொடைக்கானலில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.கொடைக்கானலில் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பெருமாள் மலை பகுதியில் இருந்து கொடைக்கானல் ஏரிச்சாலை வரையில் ஆக்கிரமிப்புக்கள் பெருகி போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதுபற்றி கொடைக்கானல் நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் செந்தில் கூறுகையில், கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து ஏரி சாலை வரை ஆக்கிரமிப்புக்கள் பெருகி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் சுமார் 200 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஏரிச்சாலையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என்றார்.

Related Stories: