100 நாள்வேலை பணித்தள பொறுப்பாளரை மாற்றக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்கள்

துறையூர், ஜூன்18: முருகூர் ஊராட்சி பணிதள பொறுப்பாளர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரை மாற்றக்கோரி துறையூர் ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோணபாதை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் பணியாற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் மல்லிகா கடந்த 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிதள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் 100 நாள் பணித்திட்ட பணியாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பணிகள் அளிப்பதாகவும், இதற்கு ஊராட்சி செயலர் மனோகரன் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா என்பவர் புதிதாக பணிதள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மல்லிகா புதிதாக நியமிக்கப்பட்ட வனிதாவை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனை கண்டித்து கோணபாதை கிராம மக்கள் மல்லிகா மீது நடவடிக்கை கோரியும், ஊராட்சி செயலரை மாற்றம் செய்யக்கோரியும் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பொதுமக்ககளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமி, பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் கிராமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: