சாலையில் உள்ள மின் கம்பியால் பொதுமக்கள் அவதி

திண்டிவனம், ஜூன் 18: திண்டிவனம் 1வது வார்டு அய்யந்தோப்பு குறுக்கு தெருவில் சாலையின் நடுவே உள்ள ஸ்டே கம்பியால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.அய்யந்தோப்பு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மூன்றாவது தெருவில் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் உள்ளன. சாலை முடிவில் உள்ள மின் கம்பம் ஒயரின் பளு காரணமாக சாய்ந்து விடும் என்பதால் ஸ்டே ஒயர் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளது.

மூன்றாவது தெருவின் கடைசியில் குறுக்கு தெரு உள்ளது. அந்த சாலையின் நடுவே சிமெண்ட் சாலை அமைக்கும் முன் போடப்பட்ட ஸ்டே ஒயரை அப்புறப்படுத்தாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக புதிதாக வீடு கட்டும் பொதுமக்கள் சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், சென்ட்ரிங் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இரவு நேரங்களில் சாலையின் நடுவே உள்ள ஸ்டே கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி சாலை நடுவே உள்ள ஸ்டே கம்பியை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: