ஓமலூர் விவசாயிகள் 8 பேரின் 60 சிந்து பசுமாடுகளை விற்று பணம் மோசடி

சேலம், ஜூன் 18: ஓமலூரைச்சேர்ந்த விவசாயிகளின் 60 சிந்து பசு மாடுகளை மேகாலயாவில் விற்பனை செய்த நிலையில் அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வரும் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மந்திரி, பூபாலன், பரமசிவம், உள்பட 8 பேர் சேலம் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோரை நேற்று சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பது:  நாங்கள் அனைவரும் விவசாயிகள். சொந்தமாக ஆடு, மாடுகளை வளர்த்து அதனை விற்பனை செய்து வாழ்ந்து வருகிறோம். சேலம் சங்கர் நகரை சேர்ந்த அசோக் என்பவர் எங்களது சிந்து வகையை சேர்ந்த 60 மாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேகாலயா மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்தார். மாடுகள் அனைத்தும் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு  செல்லப்பட்டது.

15 நாட்களில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக பணம் வந்து விடும் என்றார். இதற்காக ₹14 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால் பணம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். நேரில் சந்திக்க வீட்டிற்கு சென்றால், வீட்டில் இருந்துகொண்டே இல்லை என கூறி விடுவார். மேலும் எங்களை மிரட்டி வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழியில்லை. இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். மனு குறித்து விசாரிக்க போலீசாரக்கு உத்ரவிடப்பட்டது. அதன் பேரில் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: