பள்ளி மாணவர்களுக்கான கைடுகள் விலை உயர்வு

ஓமலூர், ஜூன் 18: ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  அனைத்து வகுப்புகளுக்கும் இன்னும் முழுமையாக பாடப்புத்தகங்கள்  வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் கடைகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம்,  அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள  கைடுகளை (நோட்ஸ்) வாங்கி பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்களும் இந்த  கைடுகளை வாங்க பெற்றோருடன் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அரசு  பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் பெற்ற மாணவ, மாணவிகளும் கைடு வாங்கி  பயன்படுத்தி வருகின்றனர். கடைகளில் தனியார் நிறுவனங்கள் 3ம் வகுப்பு முதல்  12ம் வகுப்பு வரையிலான பாடங்களுக்கு முதல் பருவத்துக்கான கைடுகளை  விற்பனைக்கு வெளியிட்டுள்ளன.

ஆனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  கடந்தாண்டு ஒவ்வொரு பாடத்திற்கான கைடுகள் ₹50 முதல் ₹290 வரை விற்பனை  செய்யப்பட்டது. ஆனால், நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டம் மாறியதாலும், பேப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, கைடுகளின் விலை ₹70 முதல் ₹450 ஆக  உயர்ந்துள்ளது.தவிர, கடந்தாண்டு மூன்று பருவத்திற்கும் ஒரே கைடு வாங்கியவர்கள், தற்போது முதல் பருவத்திற்கான கைடினை மட்டும், இந்த  கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து  உள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் சுற்றுவட்டார  கிராமங்களில் உள்ள சாதாரண ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள்  கூடுதல் விலை கொடுத்து கைடுகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதிய  பாடத்திட்டம் காரணமாக, பழைய மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு கைடுகளை வாங்கி  பயன்படுத்த முடியாத நிலையிலும் உள்ளனர். எனவே, அரசு நடவடிக்கை எடுத்து ஏழை  மாணவர்களின் நலன் கருதி குறைந்த விலையில் கைடுகள் கிடைக்க, வழிவகை செய்ய  வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: