×

ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்கவே மாங்கனி கண்காட்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 18: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. கண்காட்சி நடந்து வரும் மைதானத்தை, கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆண்டிற்கு மூன்றரை லட்சம் மெட்ரிக் டன் மாங்காய் விளைகிறது. இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து, வெளிநாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்வதன் மூலம் 500 கோடி ரூபாய்க்கு மேல் அந்நிய செலாவணி வருவாய் கிடைக்கிறது. மேலும், மூன்றரை லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மாங்கனி கண்காட்சியில் பல தரப்பட்ட மாங்காய் விளைவிக்கும் விவசாயிகளை ஊக்கப்படுத்த பயிற்சி கொடுக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மாவட்டத்தில் வறட்சியால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மாமரங்கள் காய்ந்து விட்டன. மேலும், மாங்காய்க்கு போதிய விலையும் கிடைக்கவில்லை.

இந்த முறை அவசரம், அவசரமாக தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியில் அமைச்சரோ, துறையின் உயர் அதிகாரிகளோ கலந்து கொள்ளவில்லை. விழா மேடை உள்ளிட்ட சில பணிகள், சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம் மற்றும் 80 கடைகள் என ஆளுங்கட்சியினருக்கே வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிப்பதற்காகவே நடத்த கூடிய நிகழ்ச்சியாக, மாங்கனி கண்காட்சி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது நகர திமுக செயலாளர் நவாப், கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Mangani ,exhibition ,
× RELATED மாங்கனிக்கு பெயர் போன சேலம் மக்களவை தொகுதியை வசியப்படுத்தப்போவது யார்