8 கூட்டுறவு இயக்குனர் பதவிகளை தொழிலாளர் நல கூட்டணி கைப்பற்றியது

புதுச்சேரி, ஜூன் 18: புதுவை மின்துறையில் நடைபெற்ற தேர்தலில் 8 கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் பதவிகளையும் தொமுச, ஐடிஐ உள்ளிட்டவை இணைந்து அமைத்த தொழிலாளர் நல கூட்டணி கைப்பற்றியது.புதுவையில் மின்துறை ஊழியர்கள் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க இயக்குனர் குழு தேர்தல் நடைபெற்றது. உப்பளம், பெத்திசெமினார் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற இத்தேர்தலில் 1,236 பேர் வாக்களித்தனர். தேர்தல் அதிகாரி ராம்குமார் தலைமையிலான 10 அலுவலர்கள் கொண்ட குழு இத்தேர்லை நடத்தி முடிவுகளை வெளியிட்டது. மொத்தம் 8 இயக்குனர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 7 பொது தொகுதியாகவும், 1 தனி தொகுதியாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் பொது பிரிவில் 23 பேரும், தனி பிரிவில் 2 பேரும் களத்தில் நின்றனர்.இதில் பொது பிரிவில் ஐடிஐ சங்கம் அருள்மொழி, கார்த்திகேயன், குமரன் ஆகியோரும், தொமுசவில் ராமமோகன், செந்தில்குமார் ஆகியோரும் வெற்றி பெற்றனர். மேலும் சிஐடி பரசுராமன், பில்கலெக்டர் சங்கம் சைமன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தலித் பிரிவில் உத்திராடம் என்பவர் வெற்றிவாகை சூடினார். இந்த தேர்தலில் மின்துறை தொமுச, ஐடிஐ, சிஐடியு, தலித் சங்கம், பில் கலெக்டர் சங்கம் ஆகியவை இணைந்து தொழிலாளர் நல கூட்டணி என்ற பெயரில் போட்டியிட்டது. இதில் ஐடிஐ 3, தொமுச 2 மற்ற சங்கங்கள் தலா ஒரு இயக்குனர் பதவிகளை பிடித்து ஒட்டுமொத்தமாக வெற்றிக்கனியை பறித்தது குறிப்பிடத்தக்கது. இதில் தொமுசவில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் மாநில திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertising
Advertising

Related Stories: