3 மாத ஊதியத்தை உடனே வழங்க கோரிக்கை

காரைக்கால், ஜூன் 18: காரைக்கால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவி முத்துலெட்சுமி  தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுசெயலாளர்  ஷேக் அலாவுதீன், அலுவலக செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின்  பணிமூப்பு பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, அக்குறைபாடுகளை நீக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை நிர்வாகத்திற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தனித்தனியாக கடிதம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கு உள்ள ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும். அங்கன்வாடியில் காலியாகவுள்ள நிரந்தர அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் பதவிகளில் 3 ஆண்டுகள் பணிமுடித்த தினக்கூலி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல 7வது ஊதியக்குழு பரிந்துரைகளையும் அமல்படுத்த வேண்டும். 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கவேண்டிய 50 சதவீத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். 2018ம் ஆண்டிற்கு உரிய போனஸ் தொகையை காலதாமதமின்றி உடனே வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: