×

புதுவையில் சுருக்கு வலைக்கு விரைவில் தடை

புதுச்சேரி, ஜூன் 18: கடலூர் மாவட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்த சுருக்கு வலைகளை மீட்டு தர வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சரிடம் மீனவர்கள் முறையிட்டனர். அப்போது, புதுவையிலும் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்படுவது தவிர்க்க முடியாது என்று தெரிவித்தார்.நாடு முழுவதும் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுவையில் மீனவர்கள் சுருக்கு வலை பயன்படுத்த தடை விதிக்கப்படவில்லை. இதனால் 85 சதவீத மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். அண்டை மாநிலமான தமிழகத்தில் சுருக்கு வலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடைக்காலம் முடிந்து, கடலில் மீன்பிடிப்பதற்காக புதுவை மீனவர்கள் சுருக்கு வலையை கடலுக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, தமிழக அதிகாரிகள் சுருக்கு வலையை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் புதுவை சட்டசபையில் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவை மீனவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, கடலூரில் தமிழக அதிகாரிகள் பறிமுதல் செய்த 3 சுருக்கு வலைகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதிலளித்து பேசியதாவது: நாடு முழுவதும் சுருக்கு வலையை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு ஒவ்வொரு மாநிலமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுருக்கு வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் தடை இருப்பதால் புதுவையிலும் தடை விதிப்பதை தவிர்க்க முடியாது.

 தமிழக அதிகாரிகள் பறிமுதல் செய்த சுருக்கு வலையை விடுவிக்குமாறு, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் எம்.சி.சம்பத், மீன்வளத்துறை செயலர், இயக்குனர் உள்ளிட்டோரிடம் பேசினேன். தடை இருப்பதால் விடுவிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர். இருப்பினும், கடைசி வாய்ப்பாக பறிமுதல் செய்யப்பட்ட சுருக்கு வலையை விடுவிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் அபராதம் விதித்தாலும் அதனை கட்ட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளேன். சுருக்கு வலை விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று நாளை (இன்று) மத்திய மீன்வளத்துறை செயலர், இணை செயலர் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளேன். மீனவர்களுக்கு என்னுடைய பேச்சில் நம்பிக்கை இல்லை என்றால், 2 பேர் என்னுடன் டெல்லி வந்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொள்ளலாம். மேலும், 2 மீனவர்கள் கேரளா சென்று அங்குள்ள நிலை குறித்தும் அறிந்து வாருங்கள். புதுவையில் சுருக்கு வலை தடையை செய்வதற்கு முன்பாக வருகிற 25ம் தேதி  கடலோர பகுதி எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் சுருக்கு வலை தடைக்கு பிறகு மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக கலந்து பேசி முடிவெடுக்கப்படும்இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, அங்கு திரண்டிருந்த மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...