அதிக திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்தும் 4 விசைப்படகுகளுக்கு தடை விதிக்காவிட்டால் 20ம் தேதி மறியல் நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சேதுபாவாசத்திரம், ஜூன் 18: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தஞ்சை மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர்கள் புதுக்கோட்டை முருகானந்தம், ராமநாதபுரம் முனியசாமி, திருவாரூர் ராஜேந்திரன், நாகை ஆறுகாட்டுதுறை ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்யக்கூடிய அதிக திறன் கொண்ட இன்ஜின்களை பயன்படுத்தி 4 விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. பாக்ஜலசந்தி கடல்பகுதி மிகவும் ஆழம் குறைந்த பகுதி என்பதால் மீன்வளம் குறைந்து நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து வருகிறது. இதனால் அதிக திறன் கொண்ட இன்ஜின்கள் பயன்படுத்தும் படகுகளுக்கு தடை விதிக்க வேண்டுமென நாட்டுப்படகு மீனவர்களின் சார்பில் புகார் கொடுத்தோம். இந்நிலையில் தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்றபோது மீன்வளத்துறையால் அனுமதி டோக்கன் வழங்கவில்லையென கூறப்படுகிறது. ஆனால் அனுமதியின்றி கடலுக்கு சென்ற 4 படகுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் 20ம் தேதி சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் 5 மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களும் சாலை மறியலில் ஈடுபடுவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 5 மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: