×

கலசபாக்கம் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை முழுமையாக தீர்க்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

கலசபாக்கம், ஜூன் 18: கலசபாக்கம் ஒன்றியத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க விவசாய கிணறுகள், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. கலசபாக்கம் ஒன்றியத்தில் முக்கிய நீராதாரமாக விளங்கும் மேல்ேசாழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை முற்றிலுமாக வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. மேலும் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளால் தண்ணீர் பிரச்னை தலைதூக்கி உள்ளது.

கலசபாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோல சிறுவள்ளுர் ஊராட்சியில் டேங்கர் லாரி மூலமும், காம்பட்டு ஊராட்சியில் முன்னாள் திமுக ஊராட்சி தலைவர்கள் கார்த்திகேயன், ராமன் ஆகியோர் டேங்கர் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

மேலும் குடிநீர் பிரச்னையை சமாளிக்க பொதுநிதி, இடைவெளி நிரப்பு நிதி, 14வது மாநில நிதிக்குழு மானியம் இவற்றின் மூலம் சுமார் ₹2.50 கோடி மதிப்பில் புதிய கிணறு அமைத்தல், கிணறு ஆழப்படுத்துதல், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிநீர் பிரச்னையை முழுமையாக சமாளிக்க முடியாததால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். கடும் வறட்சி தொடருவதால், மேலும் குடிநீர் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...