×

தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவக்கம்

தண்டராம்பட்டு, ஜூன் 18: தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் வேடியப்பன் தலைமை தாங்கினார். செங்கம் மாவட்ட கல்வி அலுவலர் வெங்கட்ராமன், துணை ஆய்வாளர் வேங்கடசுப்பிரமணியன், வட்டாரக் கல்வி அலுவலர் நேரு முன்னிலை வகித்தனர். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் கோவிந்தராஜூ வரவேற்றார்.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது: அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள், புத்தகம், பை, நோட்டு, பென்சில் போன்ற தரமான கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும். அரசுப்பள்ளியில் தான் தற்போது சிறந்த கல்வியை இலவசமாக வழங்க முடியும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வியை கற்றுத்தருகின்றனர். எனவே, அனைத்து பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்காமல் அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக 2019-20ம் கல்வியாண்டு எல்கேஜி, யுகேஜியில் 70 மாணவ, மாணவிகளை மாலை அணிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பள்ளியில் சேர்த்துக் கொண்டார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சீனுவாசன், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் சங்கரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Elgheji ,Dantarampattu ,Vannapuram Government Elementary School ,
× RELATED தண்டராம்பட்டு அடுத்த கீழ்சிறுபாக்கம்...