பரமக்குடி ரயில்வே மேம்பாலத்தை மதுபாராக மாற்றிய கும்பல்

பரமக்குடி, ஜூன் 14:  பரமக்குடி ரயில்வே மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக வைக்கப்பட்டிருந்த ஒளிரும் விளக்குகளை சேதப்படுத்தி உடைக்கும் சமூக விரோதிகள், இரவு நேரங்களில் பாராக பயன்படுத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பரமக்குடியில் ராமேஸ்வரம்-மதுரை ரயில் பாதை முதுகுளத்தூர் சாலையின் குறுக்கே சென்றதால், ரயில் வரும் நேரங்களில், மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வரையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் ரயில் பாதையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்றதால், முதுகுளத்தூர் சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தில் வாகனங்களில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு உதவியாக, பாலத்தின் இரண்டு சுவர் பகுதிகளில் கருப்பு கோடுகள் வரையப்பட்டு, ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தது.

தற்போது முதுகுளத்தூர் செல்லும் போது வலதுபுறத்தில் உள்ள ஒளிரும் விளக்குகள் சமூக விரோதிகளால் உடைத்து சாலையில் கண்ட இடங்களில் சிதறி கிடக்கிறது. இரவு நேரங்களில் பாலத்தின் விளக்குகள் சரிவர எரியாமல் உள்ளதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள். பாராக பயன்படுத்தி வருகின்றனர். கும்பலாக வரும் இளைஞர்கள் பைக்கை நிறுத்தி, வண்டியில் இருந்து கொண்டே மது குடித்து வருகின்றனர்.

குடித்து முடித்து பாட்டில்களை உடைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால், பாலத்தில் நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களை பதம்பார்த்து வருகிறது. இரவு பணியில் உள்ள போலீசார் வரும்போது இயல்பாக நடத்து கொள்ளும் சமூக விரோதிகள் பல குற்றச்சம்வபங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள், அரசின் சொத்துகளை சேதப்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியின் போது, ரயில் பாலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து பரமக்குடி பாபு கூறுகையில், ரயில் பாலத்தில் சமூக விரோதிகள் குடிப்பதும், குடிபோதையில் அங்குள்ள ஒளிரும் விளக்குகளை உடைத்து சாலையில் எறிகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்வது பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வெளியில் இருந்து வரும் நபர்கள் வெளிச்சம் இல்லாமல் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி கொள்வதால், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வெளியிலிருந்து வரும் நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருகிறது. ஆகையால், போலீசார் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

× RELATED ஜி.கே.ரெட்டியிடம் ரூ.86 லட்சம் மோசடி செய்த மதுரை கல்குவாரி அதிபர் கைது