×

பன்றி,கால்நடைகளுக்காக காவிரி குடிநீர் குழாய் உடைப்பு கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கீழக்கரை, ஜூன் 14: குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி குடிநீர் குழாயை உடைத்து கால்நடை, பன்றிகளுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புல்லாணியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆகி விட்டது. இ.சி.ஆர் சாலையில் திருப்புல்லாணி முக்கு ரோட்டில் குடிநீர் குழாயை சிலர் சேதப்படுத்தி தண்ணீரை தேக்கி கொள்கின்றனர்.

இதனால் திருப்புல்லாணி போன்ற ஊர்களுக்கு செல்லும் குடிதண்ணீர் தடுக்கப்படுகிறது. ஆகவே அதிகாரிகள் உடன் அந்த சேதப்படுத்தப்பட்ட குழாயை சரி செய்து திருப்புல்லாணிக்கு முறையாக குடிதண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட துணைத்தலைவர் அப்துல் வஹாப் கூறுகையில், ‘திருப்புல்லாணி ஒரு சுற்றுலாதலம். இங்கு புகழ்பெற்ற ஆதிஜெகநாத பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு வாழும் மக்களுக்கே சரியான முறையில் காவேரி கூட்டு குடிநீர் வருவதில்லை. காரணம் இ.சி.ஆர் சாலையிலிருந்து திருப்புல்லாணிக்கு திரும்பும் இடத்தில் உள்ள பொன்னங்கழிகானல் நீரோடை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயை சிலர் சுயநலத்துடன் சேதப்படுத்துகின்றனர். இதனால் வெளியாகும் தண்ணீரை அங்கேயே தேக்கி வைத்து பன்றிகளை குளிக்க வைக்கின்றனர்.

மேலும் இந்த குழாய் வழியாகதான் கீழக்கரைக்கும் தண்ணீர் செல்கிறது. அப்படி செல்லும் தண்ணீர் பன்றிகள் குளித்த கழிவுநீர் மீண்டும் குழாய்க்குள் சென்று கீழக்கரை மக்களுக்கு சப்ளை செய்யப்படுவதால் நோய் பரவும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து திருப்புல்லாணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கலெக்டர் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த முறைகேடான செயலை தடுத்து நிறுத்தி திருப்புல்லாணி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சீரான முறையில் காவிரி கூட்டு குடிதண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை