ஆய்வுக்கு சென்றபோது மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலருக்கு மிரட்டல் தலைமை ஆசிரியர், மனைவி மீது வழக்கு

ராமநாதபுரம், ஜூன் 14:  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அதிகாரி அளித்த புகாரின் பேரில், பள்ளி தலைமை ஆசிரியர், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உண்டு உறைவிட சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியராக தசரதபூபதி பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ம் தேதி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேல் பள்ளிக்கு ஆய்வு நடத்த சென்றுள்ளார்.

தலைமை ஆசிரியர் உள்பட பொறுப்பானவர்கள் யாரும் இல்லாத நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், சமையலர்கள் மற்றும் வருகைப் பதிவேடு உள்ளிட்ட விவரங்களை ஆய்வு நடத்தியுள்ளார். பின்னர் ஜீப்பில் ஏறி வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த தலைமை ஆசிரியர் தசரதபூபதி வாகனத்தை நிறுத்தி மீண்டும் ஆய்வு நடத்த வரச் சொன்னதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் தரப்பில் இரண்டு நாட்கள் ஆய்வு நடந்த போது நீ்ங்கள் இல்லை என கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அரசு காரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்து, செல்போனை உடைத்ததாக மாவட்ட மாற்றுத்திறனாளி மேம்பாட்டு திட்ட அதிகாரி தங்கவேல் கேணிக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மாற்றுத்திறனாளி உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் தசரதபூபதி, அவரது மனைவி தசரதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : head teacher ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை...