×

கார் பலூன் காப்பாற்றியது

மேலூர், ஜூன் 14: கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த ஜார்ஜ், மேரி, ஜோசப் நாகப்பட்டணம் நோக்கி காரில் மேலூர் நான்கு வழிச்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர். சத்தியபுரம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோரத்தில் பாய்ந்து உருண்டது. அப்போது காரில் பொருத்தியிருந்த பலூன் வெளியே வர 3 பேரும் காயத்துடன் தப்பினர். எனினும் கார் அப்பளமான நொறுங்கியதால் யாராலும் வெளியே வர முடியவில்லை. தீயணைப்பு படையினர் வந்து 3 பேரையும் மீட்டு மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர்.

11 கிலோ கஞ்சா: 5 பேர் கைது:
சோழவந்தான் பகுதியில் எஸ்பி தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். விக்கிரமங்கலம்- உசிலம்பட்டி சாலை வழியாக டூவீலரில் கஞ்சா கடத்தி வந்த உத்தப்பநாயக்கனூர் ரமேஷ்பாண்டி (38), கீரிப்பட்டி சின்னசாமி (38) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விக்கிரமங்கலம் பஸ்ஸ்டாண்டில் கஞ்சா வைத்திருந்த கீரிப்பட்டி காமாயி (45) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 5 கிலோ கஞ்சா, ரூ.1880 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மதுரை மேல அனுப்பானடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேல அனுப்பானடியை சேர்ந்த தவிடன் (19), அண்ணாநகரை சேர்ந்த கண்ணன் (20) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ரயில் மோதி வாலிபர் பலி:
மதுரை சோலையழகுபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் முகேஷ் (19). இவர் நேற்று பழங்காநத்தம் - டிவிஎஸ் நகர் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டி கேட்டு கொலை மிரட்டல்:
மதுரை பழைய குயவர் பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (27). கோயில் பூசாரி. இவரது உறவினருக்கு அறுவை சிகிச்சை செய்ய அப்பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரிடம் வீட்டு பத்திரம், காசோலை, புரோ நோட்டுகளை கொடுத்து ரூ. 8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு 7 சதவீதம் வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கொடுத்த பணம், வட்டியை கேட்டு சங்கர் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறி, கார்த்தி கீரைத்துறை போலீசில் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கர் மீது கந்து வட்டி கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு