கோயில்களில் கும்பாபிஷேகம்

மேலூர், ஜூன் 14: கொட்டாம்பட்டி அருகே வலைச்சேரிபட்டியில்  செல்வ விநாயகர்,  பெரியநாயகி அம்மன்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 11ம் தேதி பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து 2, 3ம் கால யாகசாலை பூஜைகள், 7 வகையான ஹோமங்கள் நடந்தன. நேற்று 10 மணிக்கு இரு கோயில்களிலும் சிவாச்சாரியார் செல்வகுமார் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாலமேடு அருகே பொந்துகம்பட்டியில் சித்திவிநாயகர், முத்தாலம்மன் கோயில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக 2 நாட்கள் ஹோமம், பூஜைகள் நடந்தன.

நேற்று புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு புனித தீர்த்தம், பூஜை மலர்கள் வழங்கப்பட்டது. சேடபட்டி அருகே தொட்டணம்பட்டி கழுவுடையான் கோயிலில் கழுவுடையான், சீலைக்காரி, சீனிவாச பெருமாள், கருப்பசாமி மற்றும் 21 தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி கடந்த 11ம் தேதி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு ஹோமம், யாகம், நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று யாகசாலை பூஜைகள் முடிந்து கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோயிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. 3 கும்பாபிஷேகங்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: