×

குழந்தைகளை அனுப்ப மறுத்ததால் அங்கன்வாடி ஊழியர்கள் பணியிட மாற்றம்

திருமங்கலம், ஜூன் 14: மதுரை திருமங்கலம் அருகே அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுத்ததால் ஊழியர்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மனித உரிமை ஆணையம் கண்டிப்பால் மீண்டும் 2 பேர் அதே இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
திருமங்கலம் அருகே எஸ்.வலையபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. கிராமத்தை சேர்ந்த ஒருதரப்பினர் மட்டுமே இதுவரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வந்துள்ளனர். தேர்தல் முடிந்ததையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தாண்டு கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் ஜல்லிக்கட்டு விழாவில் தங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மதுரை கலெக்டராக பணியாற்றிய நாகராஜ் அங்கன்வாடி காலிபணியிடங்களை நிரப்பியதை தொடர்ந்து வலையபட்டிக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஜோதிலெட்சுமிக்கு அங்கன்வாடி பணியாளர் பணியும், அன்னலட்சுமிக்கு அங்கன்வாடி உதவியாளர் பணியும் கிடைத்தது.

கடந்த 4ம் தேதி இருவரும் வலையபட்டியில் தங்களுக்கு உரிய பொறுப்புகளை ஏற்றனர். ஆனால் இதற்கு கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்தனர். மேலும் மக்கள் திரண்டு திருமங்கலம் பிடிஓவை சந்தித்து தங்களது கிராமத்து அங்கன்வாடி பணியாளர்களை மாற்றவேண்டும், அதுவரையில் குழந்தைகளை மையத்திற்கு அனுப்பமாட்டோம் என கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஜோதிலெட்சுமியை மதிப்பனூர் மையத்திற்கும், அன்னலட்சுமியை கிழவனேரி மையத்திற்கும் தற்காலிகமாக பணிசெய்யும்படி அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். எனினும் வலையங்குளத்தில் இதுவரையில் அங்கன்வாடி மையம் இயங்கவில்லை. இதுகுறித்து ஜோதிலட்சுமி, அன்னலட்சுமியிடம் கேட்ட போது, ‘ மாவட்ட கலெக்டர் எங்களுக்கு பணியாணை கொடுத்து வலையங்குளத்திற்கு அனுப்பி வைத்தார்.

நாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பவில்லை. இந்த மையத்தில் 20 குழந்தைகள் உள்ளன. எனவே மாற்றுபணியாக எங்களுக்கு வேறு கிராமத்திற்கு பணி கொடுத்துள்ளனர். எனினும் எங்களுக்கு பணியாணை கொடுத்த ஊரில் பணிசெய்யவே விருப்பமாக உள்ளது’ என்றனர்.

அங்கன்வாடி நிலையால் அதிகாரி அதிர்ச்சி:
அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பது குறித்து தகவலறிந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட இணை இயக்குனர் மலர்விழி நேற்று வலையபட்டிக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து எந்நேரமும் கட்டிடம் கீழே இடிந்துவிழும் நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அவர் அதிகாரிகளை கண்டித்து உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும், குழந்தைகளை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

மங்கலம் அருகே தொடர் பதற்றம் கலெக்டர் அவசர உத்தரவு:
மதுரை மாவட்ட கலெக்டர் (பொ) சாந்தகுமார் நேற்று ஒரு ஆணையறிக்கை வெளியிட்டார். அதில் மதிப்பனூர், கிழவனூர் கிராமங்களில் கூடுதல் பொறுப்பு பணியில் இருந்து வரும் ஜோதிலட்சுமி, அன்னலட்சுமியை விடுவித்து இருவரும் சத்துணவு ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட அங்கன்வாடியிலேயே பணி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இந்த திடீர் உத்தரவால் அப்பகுதியில் தொடர் பதற்றம் நிலவுகிறது.


கிராம மக்கள் நெருக்கடிக்கு பணிந்து ஊழியர்களை மாற்றுவதா?
மதுரை கலெக்டர் அறிக்கை தர உத்தரவு:
கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து ஊழியர்களை இடமாற்றம் செய்தது ஏன்? மதுரை கலெக்டர் ஜூலை 17ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் வலையபட்டி கிராம அங்கன்வாடி மையத்தில் சமையலர், உதவியாளர் பணியிடங்களில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நியமிக்கப்பட்டனர்.

இதற்கு கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் மாவட்ட நிர்வாகம் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்தது. இது தொடர்பாக பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தது. இந்த செய்தியை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

அப்போது கிராம மக்களின் நெருக்கடிக்கு பணிந்து இரு ஊழியர்களை இடமாற்றம் செய்தது ஏன்? இது மனித உரிமை மீறல் ஆகாதா? இந்த விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 17ம் தேதிக்குள் மதுரை கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Tags : children ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...