ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆன்லைன் மூலம் திருடும் கும்பல் அதிகரிப்பு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம். ஜூன் 14: ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆன்லைன் மூலம் நூதன முறையில் திருடும் கும்பல் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நுகர்வோர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் செலுத்தும் கட்டணங்களை பணமாக நேரடியாக பெறுவதை தவிர்த்து ஆன்லையன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து கொள்வதையே பெரிதும் விரும்புகிறது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகளவில் மளிகை கடை முதல் ஓட்டல், நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர் கடை போன்ற வர்த்தக ஸ்தாபனங்களிலும் வங்கியால் வழங்கப்பட்ட கிரெடிட், டெபிட் கார்டுகளை கொண்டு சிறிய ரக மிசின்கள் மூலம் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இந்த சூழலில் சாமானிய மக்கள் கூட தங்கள் வங்கி கணக்கில் எப்பொழுதும் பணம் வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல் மக்களிடம் வங்கி அதிகாரிகள் போல செல்போனில் பேசி அவர்களின் கணக்கு விபரங்களை சேகரித்து போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி நூதனமான முறையில் மக்களின் பணத்தை திருடும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் செல் போன்களுக்கு இதுபோன்ற மோசடி பேர்வழிகளின் போன் கால்கள் வருவது அதிகரித்துவிட்டது.
ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, இடையகோட்டை, ஜவ்வாதுபட்டி, கள்ளிமந்தையம் ஆகிய கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இதுபோல் நூதன முறையில் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் விஸ்வரத்தினம் நுகர்வோரை எச்சரிக்கை செய்து உள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு எண், ஏ.டி.எம் பின் நம்பர் (ரசிய பாஸ்வேர்டு), ஆதார் எண் போன்ற எந்த தகவலையும் கேட்பது இல்லை, எனவே மக்கள் யாரையும் நம்பி எவரிடமும் இது போன்ற தகவல்களை செல்போனில் தெரிவிக்க வேண்டாம்.

மேலும் உங்கள் மகன் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது, மத்திய அரசின் லோன் வந்துள்ளது அதை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் ஆகவே நாங்கள் கேட்கும் விபரங்களை சரியாக சொல்லுங்கள் என பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி உங்கள் வங்கி கணக்கின் விபரங்களை பெற்ற பின் அவர்கள் கைவசம் வைத்திருக்கும் போலி ஏ.டி.எம் கார்டுகளை வைத்து உங்கள் பணத்தை நூதனமாக திருடி விடும் அபாயம் உள்ளது. ஆகவே பொதுமக்கள் யாரிடமும் உங்கள் வங்கி கணக்கு விபரங்களை செல்போன் அழைப்பில் சொல்ல வேண்டாம்.

இது போன்ற போலி நபர்கள் தொடர்பு கொண்டு திரும்ப திரும்ப தொந்தரவு செய்தால் நான் வங்கிக்கு வந்து நேரடியாக தருகின்றேன் என கூறிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற புகார்கள் மீது மாவட்ட கண்காணிப்பாளர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : stealing ,areas ,Oddanchitta ,
× RELATED திருத்தணி வட்டார போக்குவரத்து...