பழுதான கட்டடம், கூரை சீரமைக்கப்படாத நகர பஸ் ஸ்டாண்ட்கள்

கோவை, ஜூன் 14:   கோவை நகரில் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்ட், டவுன்பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ஸ்டாண்ட், சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பஸ் ஸ்டாண்ட், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் மற்றும் கணபதி ஆம்னி பஸ் ஸ்டாண்ட் போன்றவற்றை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்களை நிறுத்துவது, கடைகள், கழிவறைகள் மூலமாக மாநகராட்சி வருவாய் குவிந்து வருகிறது. அதிக வருவாய் கிடைத்த போதிலும் பஸ் ஸ்டாண்ட் சீரமைப்பு பணி, சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. குறிப்பாக உக்கடம் டவுன்பஸ் ஸ்டாண்ட் மேற்கூரைகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இலவச கழிவறைகள் பல ஆண்டாக பராமரிக்கப்படவில்லை. தண்ணீர் சப்ளை இல்லாத இந்த கழிவறைகளால் துர்நாற்றம் வீசுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்ட், விரைவு பஸ் ஸ்டாண்டிலும் இதே நிலை தான். சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் மின் விளக்கு எரிவதில்லை. பஸ் ஸ்டாண்டில் இருட்டான பகுதியில் கஞ்சா விற்பனை, மது பாட்டில் விற்பனை நடக்கிறது. பிக்பாக்கெட் கும்பல் சுற்றும் இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்க அச்சப்படும் நிலையிருக்கிறது. இங்கே கழிவறைகளையும் சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உக்கடம் பஸ் ஸ்டாண்டின் மேற்கு பகுதி மேம்பால பணிக்காக இடிக்கப்பட்டது. கிழக்கு பகுதியில் சில கடைகள் ஆக்கிரமிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் நிறுத்த இடமில்லாத இந்த பஸ் ஸ்டாண்டில் பயணிகள் காத்திருக்கும் ஷெல்டர் சீரமைக்கப்படவில்லை. கழிவறை நாற்றத்தால் பயணிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்


Tags : city bus stand ,
× RELATED மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்