×

வத்தலக்குண்டுவில் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்த டூவீலர் திருடர்கள் போக்குவரத்து நெரிசலால் பணத்தை வீசிவிட்டு தப்பினர்

வத்தலக்குண்டு, ஜூன் 14: வத்தலக்குண்டுவில் வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்த டூவீலர் திருடர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பணத்தை வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே காலை 6 மணிக்கு தினசரி காய்கறி மார்க்கெட் நடக்கும் காலை 9 மணி வரை நடக்கும் மார்க்கெட் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

அப்பகுதியில் வத்தலக்குண்டு வெங்கிட்டாபட்டியைச் சேர்ந்த சன்னாசி காய்கறி கமிஷன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று விவசாயிகளுக்கு கொடுப்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக் கொண்டு ஏலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அவரது பணப் பையை பறித்துக்கொண்டு டூவீலரில் வேகமாக ஓடினர்.

அப்போது சன்னாசி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் திரள்வதற்குள் திருடர்கள் 200 அடி தூரம் கடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திருடர்கள் வேகமாக செல்ல முடியாமல் திணறி போக்குவரத்தில் சிக்கி கொண்டனர். அப்போது ஆட்கள் திரண்டு வருவதை கண்டதும் பதற்றமடைந்தனர்.

உடனே பணப்பையை அவர்களை நோக்கி வீசிவிட்டு குறுகிய இடைவெளியில் தப்பி ஓடினர். பணம் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விட்டு, சன்னாசி ஆட்கள் டூவீலர்களில் திருடர்கள் சென்ற திசையில் தேடிச் சென்றனர். 2 கி.மீ. தூரம் சென்றும் திருடர்களை பிடிக்க முடியாமல் திரும்பினர்.
தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : thieves ,
× RELATED செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற...