வெளிநாட்டு பக்தர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க சிறப்பு தொடர்பாளர்கள் பழநி கோயில் நிர்வாகம் நடவடிக்கை

பழநி, ஜூன் 14: வெளிநாட்டு பக்தர்களிடம் பணம் பறிப்பதை தடுக்க பழநி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தொடர்பாளர்கள் ஏற்படுத்தப்பட உள்ளனர்
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, நவராத்திரி, வைகாசி விசாகம் என வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர். சாதாரண நாட்களில் சராசரியாக நாளொன்றிற்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது அமெரிக்கா, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வெளிநாட்டு பக்தர் குழுக்களை வளைத்துக் கொள்ளும் போலி வழிகாட்டிகள் சிலர் சாமி தரிசனம், தங்குமிட வசதிகள் செய்து தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் கறந்து விடுகின்றனர். விவரம் தெரியாத அப்பாவி வெளிநாட்டினர் பணத்தை கொடுத்து ஏமாந்து செல்கின்றனர். தற்போது இந்த ஏமாற்று வேலை அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு தொடர்பாளர்கள் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பதற்காக ரயில் நிலையம், பஸ் நிலையம், தண்டபாணி நிலையம், திருக்கோயில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தகவல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர, கோயில் நிர்வாகம் சார்பில் மக்கள் தொடர்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளது.

விரைவில், பல்வேறு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ள தொடர்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். வெளிநாட்டினர் சாமி தரிசனம் செய்வதற்காகவும், தரிசன விவரங்கள், தங்குமிட விபரங்கள், போக்குவரத்து விபரங்களை அறிந்து கொள்வதற்கு வசதியாக கோயில் இணையதளத்திலும் பல நாடுகளின் மொழிகள் உட்புகுத்தப்பட உள்ளது. கூடுதல் தகவல்களும் இடம்பெற வழிவகை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : pilgrims ,
× RELATED கோவையில் விஜயதசமியையொட்டி பக்தர்கள் கத்திபோடும் ஊர்வலம்