×

புதிதாக உருவாக்கப்பட்ட குஜிலியம்பாறை தாலுகா ஜூலை 1ம் தேதி முதல் இயங்குகிறது

குஜிலியம்பாறை, ஜூன் 14: குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தாலுகா, 24 வருவாய் கிராமங்களுடன் வருகிற ஜூலை 1ம் தேதி முதல் செயல்பட துவங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தாலுகா 946 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன. மேலும் குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர் ஆகிய 3 ஒன்றியங்களும் உள்ளன. இதனால் மாவட்டத்தில் பெரிய தாலுகாவாக வேடசந்தூர் இருந்தது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் மற்றும் பாளையம் பேரூராட்சி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்கு பகுதியின் கடைசியில் அமைந்துள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்தின் பல கிராமங்கள் கரூர் மாவட்ட எல்லையை ஒட்டியே இருக்கிறது. இப்பகுதி மக்கள் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு 100 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

இதை கருத்தில் கொண்டு வேடசந்தூர் தாலுகாவை இரண்டாக பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தாலுகா அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் குஜிலியம்பாறை வட்டாச்சியர் அலுவலகத்தை சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.

அதன்படி குஜிலியம்பாறையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த மூன்று மாதமாக தாலுகா அலுவலகம் செயல்படாமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேடசந்தூர் தாலுகாவில் இருந்து வருவாய் கிராமங்கள் பிரிக்கப்பட்டு குஜிலியம்பாறை தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குஜிலியம்பாறை தாலுகா அடுத்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் முறைப்படி செயல்பட இருக்கிறது. இதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குஜிலியம்பாறை தாலுகாவில் கோட்டாநத்தம், பாளையம், கோவிலூர் ஆகிய 3 குறுவட்டங்களும், 24 கிராமங்களும் இடம் பெற்றுள்ளன. இதில் கோட்டாநத்தம் குறுவட்டத்தில் ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், லந்தக்கோட்டை, கருங்கல், தீண்டாக்கல், ஆலம்பாடி, கோட்டாநத்தம், தோளிபட்டி, டி.கூடலூர் ஆகிய 9 வருவாய் கிராமங்கள் உள்ளன.

அதேபோல் பாளையம் குறுவட்டத்தில் பாளையம், கூம்பூர், மல்லப்புரம், வாணிக்கரை, ஆர்.புதுக்கோட்டை, உல்லியக்கோட்டை, சின்னுலுப்பை, கரிக்காலி ஆகிய 8 வருவாய் கிராமங்களும், கோவிலூர் குறுவட்டத்தில் குளத்துப்பட்டி, குடப்பம், வெம்பூர், நல்லூர், நாகையகோட்டை, வடுகம்பாடி, ஆர்.கோம்பை ஆகிய 7 வருவாய் கிராமங்களும் இடம் பெற்றுள்ளன. எனவே கிராம மக்கள் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags : Gujiliyambara Taluk ,
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு