பிச்சைக்காரன் ஓடையில் மீண்டும் சாயக்கழிவுநீர்

ஈரோடு, ஜூன் 14:   ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் மற்றும் சலவை பட்டறை உரிமையாளர்கள் கழிவு நீரை பிச்சைக்காரன் ஓடை, சுண்ணாம்பு ஓடை, பெரும்பள்ளம் ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் திறந்துவிட்டு விடுகின்றனர். இந்த தண்ணீர் நேரடியாக காவிரி ஆற்றிக்கு சென்று கலப்பதால் மாநகராட்சி நீரேற்று நிலையங்களில் இருந்து எடுத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசுபடிந்து விடுகிறது.  குறிப்பாக, பிச்சைக்காரன் ஓடையில் அதிகளவில் சாயப்பட்டறை கழிவு நீர் செல்வது வழக்கமாகிவிட்டது.

இதைத்தடுக்க, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டாலும் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுக்கும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் திறந்துவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நேற்று காலை வைராபாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் சிவப்பு நிறத்தில் காணப்பட்டதால் அங்கு குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கழிவுநீர் எங்கிருந்து வருகிறது என்று பார்த்த போது பிச்சைக்காரன் ஓடையில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீருடன் சாயக்கழிவு நீரும் பெருக்கெடுத்து வந்தது தெரியவந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பிச்சைக்காரன் ஓடையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகள் குழாய் அமைத்து கழிவுநீரை வெளியேற்றி வருகின்றன. இந்த கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் வைராபாளையம் மாநகராட்சி பம்பிங் ஸ்டேசனுக்கு செல்கிறது.

அங்கிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் அவல நிலை நீடித்து வருகிறது. அவ்வப்போது, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இருப்பினும், கழிவுநீர் வெளியேற்றப்படுவது தொடர் கதையாகத்தான் உள்ளது. கடந்த 10 நாட்களாக கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறைந்திருந்த நிலையில் நேற்று காலை அதிகளவில் கழிவுநீர் பெருக்கெடுத்து சென்றதால் காவிரி ஆற்றின் ஒரு பகுதி முழுவதும் சிவப்பு நிறத்தில் தண்ணீர் தேங்கி கிடந்ததை காண முடிந்தது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டால் மட்டுமே இதை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: