ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க பவானி அணையில் இருந்து குடிநீர் எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 14: பவானிசாகர் அணையில் இருந்து பவானி அணைக்கட்டு வரை 70 கி.மீ. தூரத்தில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து ஆற்றில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்காமல் சட்ட விரோதமாக ஆற்றின் கரையோரங்களில் மின் மோட்டார்களை வைத்து ஏராளமானோர் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.இதைத்தடுக்க முடியாமல் பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டும் தீர்வு எட்டவில்லை. பாசனத்திற்காக மூடப்படும் அணை, உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவைக்காக மட்டுமே கோடை காலத்தில் திறக்கப்பட்டு வருகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகள் பவானி ஆற்றில் தண்ணீர் எடுப்பதற்கு பதிலாக நேரடியாக அணையிலேயே குழாய் அமைத்து தண்ணீர் எடுத்துக்கொண்டால் ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் சட்டவிரோத நீரேற்று பாசனங்களை தடுக்க முடியும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறியதாவது:பவானி ஆற்றில் 70 கி.மீ. தொலைவிற்கு தண்ணீர் சட்ட விரோதமாக திருடப்பட்டு வருகிறது. இந்த திருட்டை பொதுப்பணித்துறையினரால் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை. ஆற்றில் தண்ணீர் திறப்பதால்தான் திருடுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அணை திறக்கப்படுகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக அணையில் இருந்து குழாய் அமைத்து ஆற்றில் கரையோரத்தில் கொண்டு சென்று எளிதாக விநியோகிக்கலாம்.தற்போது, குடிநீர் தேவைக்காக ஆற்றில் 200 கன அடி திறக்கப்படுகிறது. குழாய் அமைத்தால் வெறும் 50 கன அடி திறந்தால் போதும். மதுரை மாநகரின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து 60 கன அடிதான் திறக்கப்படுகிறது. ஆனால், பவானிசாகர் அணையில் இருந்து 200 கன அடி என்பது தண்ணீர் திருடுவதற்காக அதிகாரிகளே திட்டமிட்டு திறந்துவிடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.அணையில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் முன்வர வேண்டும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: