போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு பழிவாங்க கூடாது

ஈரோடு, ஜூன் 14:  போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடக்கூடாது என ஜாக்டோ ஜியோ வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில செயலாளரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கர்பாபு ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கடந்த ஜனவரி மாதம் ஜாக்டோ ஜியோ சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அரசு நிர்வாகம் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டது. மாநில அளவில் 120 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 4,500 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ‘17 பி’ மெமோ கொடுக்கப்பட்டது. போராட்ட காலத்துக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. கைது நடவடிக்கை மற்றும் ‘17 பி’ மெமோவால் உடனடியாக பதவி உயர்வு பட்டியலில் உள்ள 300க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

அடுத்த சில மாதங்களில் மேலும் பலருக்கு பதவி உயர்வு வர உள்ளது. அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற நெருக்கடியை அரசு வழங்குவது ஏற்புடையது அல்ல. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கையையும் முழுமையாக கைவிட வேண்டும். ஆந்திராவில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  எனவே, தமிழகத்திலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  இவ்வாறு பாஸ்கர்பாபு கூறினார்.

Related Stories: