உலக புகழ்பெற்ற மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் திருப்பணி துவங்காவிட்டால் போராட்டம்

கும்பகோணம், ஜூன் 14: உலக புகழ்பெற்ற மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் திருப்பணியை விரைவில் துவங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்.கும்பகோணம் அடுத்த மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்த கோயில் அறநிலையத்துறையினரின் வசம் இருந்தபோது பராமரிப்பு இல்லாமல் இருந்தது. நாகநாதசுவாமி கோயிலில் பழமைமாறாமல் திருப்பணி செய்ய தமிழக தொல்லியல் துறையும், அறநிலையத்துறையும் முடிவு செய்து அதற்கான பணிகளை 2015ம் ஆண்டு ரூ.35 லட்சத்தில் துவங்கியது. விக்கிரவாண்டி- கும்பகோணம்- தஞ்சை சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் பணியை துவங்கும்போது இந்த கோயில் சாலையில் இடையூறாக உள்ளதால் இடிக்க வேண்டுமென அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அப்போது பழமையான கோயிலை இடிக்காமல் பாதுகாக்க வேண்டுமென தமிழக அரசிடம் வரலாற்று ஆய்வாளர்கள், சிவனடியார்கள் முறையிட்டனர்.

இதையடுத்து தமிழக அரசு, தொல்லியல் துறையை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டது. அதன்படி தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தபோது கோயிலில் ஏராளமான சிற்பங்கள் சோழர் காலத்தியவை என்றும், போற்றி பாதுகாக்க வேண்டிய கோயில் என தமிழக அரசிடம் அறிக்கை வழங்கினர்.இதையடுத்து கோயிலை இடிக்காமல் சாலையை அகலப்படுத்த வேண்டுமென நெடுஞ்சாலைத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை கொண்டு தமிழக தொல்லியல் துறையினர் 2015ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி திருப்பணியை துவங்கினர். அப்போது அறநிலையத்துறை அலுவலர்கள், இடிந்துபோன கோயிலின் கட்டிடங்களை பழமை மாறாமல் கற்களுக்கும், சிற்பங்களுக்கும் எண்களை போட்டு பாதுகாப்புடன் அகற்றினர். ஆனால் தமிழக தொல்லியத்துறை, 2016ம் ஆண்டு அறநிலையத்துறையிடமிருந்து திருப்பணி செய்வதற்காக வாங்கி கொண்டது. அதன்பிறகு கோயிலில் திருப்பணி வேலை செய்தவர்களிடம் கோயிலின் வரைபடம், புகைப்படம் மற்றும் ஆவணங்களை கேட்டபோது அவர்களுக்கு உரியத்தொகை தராததால் எதையும் கொடுக்காமல் சென்றுவிட்டனர்.

இதனால் வேறுவழியின்றி கோயில் கட்டுமான பணியை தொல்லியத்துறை துவங்கியது. ஆனால் எந்த கற்களை எங்கு வைப்பது என்று தெரியாததால் கடந்த 4 ஆண்டுகளாக திருப்பணியை தொல்லியல் துறையினர் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். இந்நிலையில் 2017ம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பை சேர்ந்தவர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மற்றும் மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலை பார்த்து தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். எனவே மானம்பாடி நாகநாத சுவாமி கோயில் மீது தனிக்கவனம் செலுத்தி அங்குள்ள சிலைகளை காணாமல் போகாமல் பார்த்து கொள்ள வேண்டும், போர்க்கால அடிப்படையில் திருப்பணி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜோதிமலை இறை பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் கூறுகையில், நாகநாதசுவாமி கோயிலில் கட்டுமான பணி குறித்து யுனஸ்கோ அமைப்பு சார்பில் திருப்தி இல்லையென கூறி இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை அனுப்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் 3 அடி உயரம் வரை நடந்த கட்டுமான பணிகள் சரியில்லையென கூறி நிறுத்தி விட்டனர். இதனால் 3 ஆண்டுகளாக திருப்பணி நடைபெறவில்லை. கோயிலை சுற்றிலும் பாதுகாப்பு இல்லாததால் சிலை கடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மானம்பாடி நாகநாதசுவாமி கோயிலின் திருப்பணியை உடனடியாக துவங்காவிட்டால் சிவனடியார்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related Stories: