×

குப்பாச்சிபட்டி பாலத்தில் அமைத்த புதிய தடுப்புசுவர் தரமாக உள்ளதா?

தோகைமலை, ஜூன் 14: குப்பாச்சிபட்டி பாலத்தில் அமைக்கப்பட்ட புதிய தடுப்பு சுவர் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சிவாயம் ஊராட்சி குப்பாச்சிபட்டி பகுதியில் உள்ள குளித்தலை மணப்பாறை மெயின் ரோட்டின் குறுக்கே பாப்பக்காபட்டி பெரியகுளத்தின் ஆற்றுவாரி செல்கிறது. இந்த ஆற்றுவாரி சிவாயம் குளத்திற்கு செல்வதால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் பருவமழையின் போது பாப்பகாப்பட்டி பெரியகுளத்தில் இருந்து சிவாயம் குளத்திற்கு அதிகமாக தண்ணீர் செல்வதால் பாலம் போதுமானதாக இல்லாமல் இருந்து உள்ளது. இதனால் குப்பாச்சி பட்டி அருகே ஆற்றுவாரி செல்லும் இடத்தில் பெரியபாலம் அமைக்கபட்டது.மேலும் குளித்தலை மணப்பாறை மெயின்ரோட்டில் கனரக வாகனம் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்வதால் பாலம் அகலப்படுத்தப்பட்டது. தொடர்நது பாலத்தின் பக்கவாட்டில் உயரமான கரைகள் இருந்ததால் வாகன விபத்துகளை தடுக்க பாலத்தை ஒட்டி உள்ள கரைபகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் குப்பாச்சிபட்டி பாலத்தின் அருகில் உள்ள கரைபகுதிகளில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால் தடுப்புசுவர் அமைக்கப்பட்டு ஒருவாரம் ஆனநிலையில் தடுப்பு சுவரில் பூசப்பட்ட சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் தடுப்பு சுவர் அமைப்பதற்காக கலக்கப்பட்ட ஜல்லிகள், சிமெண்ட்டுகளை சரிவர கலக்காமல் அப்படியே தடுப்பு சுவரில் கலவைகளை போட்டு அமைத்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ரோடு மட்டத்திற்கு மேல் அமைக்கபட்ட தடுப்பு சுவரில் கம்பி அமைக்காமல் சுவர் எழுப்ப பட்டுள்ளது.இதனால் ஒரே வருடத்தில் தடுப்புசுவர் பழுதாகும் நிலையில் உள்ளதாக சமூகஆர்வலர்கள் தெரிவித்தனர்.குப்பாச்சிபட்டி பெரிய பாலத்தில் அமைக்கப்பட்ட புதிய தடுப்புசுவர் தரமாக உள்ளதா என்று மறு ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Kuppachipatti ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!