கூடுதலாக ஆசிரியர் நியமனம் செய்யக்கோரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர், ஜூன் 14: பணப்பயன்கள் வழங்காமல் தாமதப்படுத்துவதையும், கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் ஒன்றியம் விவிஜி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1முதல் 5ம் வகுப்பு வரை 147 மாணவர்கள் பயிலுகின்றனர். இதன் படி 5 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் தற்போது 4 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஜூன்10ம் தேதி வட்டாரக் கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் எண்ணிக்கை 1முதல் 5 வரை 157பேர் இருந்தனர். இதன்படி ஆசிரியர்கள் 6 பேர் பணியாற்ற வேண்டும்.

ஆனால் இப்பள்ளியில் மிகுந்த பணிச் சுமையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதுகுறித்து பலமுறை வட்டார கல்வி அலுவலருக்கு இப்பள்ளி தலைமையாசிரியர் மூலம் கடிதம் கொடுக்கப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இப்பிரச்னை குறித்து வலியுறுத்தவும், மேலும் ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவாக நிர்ணயிப்பது, 6 மாதங்களாக விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருப்பதை கண்டித்தும் நேற்று கரூர் நகராட்சி வளாகத்தில் உள்ள உதவி கல்வி அலுவலகம் முன் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஜெயராஜ், கண்ணன், பொன்னம்பலம், குழந்தை அரசு, கண்ணதாசன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Tags : Teachers teacher ,sit-in ,teacher appointment ,Koryi Government School ,
× RELATED அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கிலம், இந்தி கற்றுகொள்ள ஆசிரியர் நியமனம்