×

ஆய்வு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு துணைவேந்தர் தகவல்

காரைக்குடி, ஜூன் 14: ஆய்வு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை துறை ஆராய்ச்சி மாணவர்கள் பேரவை சார்பில் ஆய்வு நெறிமுறைகள், தரவு பகுப்பாய்வு என்ற தலைப்பில் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. மேலாண்மை புலஆய்வாளர் ரகுவீர் நேஹி வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ஆராய்ச்சியினுடைய தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தேசிய அளவிலான கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. ஆராய்ச்சிகள் சமூக முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஆராய்ச்சியின் தரம் மேம்பட ஸ்கோபஸ் போன்ற உலகத்தர ஆராய்ச்சி இதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை தொடர்ந்து படிக்க வேண்டும். தரமான பல்வேறு பரிமாணங்களை கொண்ட புதிய கருத்துருவாக்களின் மூலம் ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை அதிகரிக்க முடியும். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இதழ்களில் குறைந்தது இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட வேண்டும். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, ஆய்வு மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை அதிகரிப்பது, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியினை மேம்படுத்துவது போன்ற செயல்களில் பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் குருமூர்த்தி, மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் ராஜமோகன், வங்கி மேலாண்மை துறைத்தலைவர் ஜெயபால், பேராசிரியர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆராய்ச்சி மாணவர் பிரசாத் நன்றி கூறினார்.

Tags :
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்