மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் மாயம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்

மானாமதுரை, ஜூன் 14: மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகள் மாயமானது குறித்து காவல்நிைலயத்தில் புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மானாமதுரை சிப்காட் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன், ஜெயராமன், கிருஷ்ணன், ராஜாங்கம். இவர்களுக்கு சொந்தமான ஆடுகள் உள்ளது. இந்த ஆடுகள் தாலுகா அலுவலகம், சிப்காட், பெரிய கண்மாய் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். கடந்த 9ம் தேதி ஞாயிறன்று மேய்ச்சலுக்கு சென்ற 13 ஆடுகளும் மாயமானது. ஆடுகள் ஆட்கள் இல்லாமல் மேய்ச்சலுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் 13 ஆடுகளையும் வாகனங்களில் ஏற்றி கடந்தி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.85 ஆயிரம் ஆகும்.

பக்கத்து கிராமத்தில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு சென்று இருக்கலாம் என்று ஜெயராமன், கிருஷ்ணன், ராஜாங்கம் ஆகியோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் சிப்காட் காவல்நிலையத்தில் கடந்த 10ம் தேதி புகார் செய்தனர். அதன்பின் தற்போது வரை ஆடுகளை திருடியவர்கள் குறித்து போலீசார் அப்படியே கிடப்பில் போட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 9ம் தேதி ஆடுகள் காணாமல் போனதும் போலீசாரிடம் தெரிவித்தோம். ஆடுகள் வேறு யாருடைய ஆட்டுக்கிடையில் இருக்கும் தேடுங்கள் என்றனர். இரண்டு நாட்களுக்கு பின் சிவகங்கை, பார்த்திபனூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி சந்தையில் தேடிப்பாருங்கள் என்று அலட்சியமாக கூறுகின்றனர். கடந்த மாதம் சபாரி காரில் வந்த சிலர் இங்குள்ள 2 ஆடுகளை திருடியபோது பிடிபட்டனர். அதே போல மர்மநபர்கள் வாகனங்களில் வந்து ஆடுகளை திருடியிருக்கலாம். எனவே எங்களது ஆடுகளை கண்டுபிடித்து கொடுக்க போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

× RELATED செங்கம் அருகே 3 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்