தம்மம்பட்டி பேரூராட்சியில் சாக்கடையில் கலந்து வீணாகும் குடிநீர்

தம்மம்பட்டி, ஜூன் 14:தம்மம்பட்டி பேரூராட்சியில் குடிநீர் தொட்டி நிரம்பி வழிந்து, பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது. தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தம்மம்பட்டி பகுதியில் 15-20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மேட்டூர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தம்மம்பட்டி-சந்தைரோடு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து பைப்லைன் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள தண்ணீர் தொட்டி அடிக்கடி நிரம்பி வழிந்து, பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாகிறது. மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் வீணாக வெளியேறும் தண்ணீர் சாக்கடையில் கலந்து வருகிறது. இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: