வாழப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பலி

வாழப்பாடி, ஜூன் 14: வாழப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சியத்தால் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வாழப்பாடி அடுத்த மன்னார் பாளையத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் சதாசிவம்(25). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக, நேற்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், வாழப்பாடி பேரூராட்சியில் வடக்கு காடுப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்பாதையில், சதாசிவம் வேலை செய்து வந்தார். மதியம் 2.45 மணியளவில் மின்தடை முடிந்து, மின் இணைப்பு வந்தபோது, மின்சாரம் தாக்கி சதாசிவம் தூக்கி வீசப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட அருகிலிருந்தவர்கள் வாழப்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் பராமரிப்பு பணிக்காக காலை முதல் மாலை 2.45 மணி வரை நிறுத்தி, பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டது. முறையாக தகவல் கொடுக்காததால், சதாசிவம் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக, அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: