கரம்பை மண் அள்ள அனுமதி மறுப்பு

தூத்துக்குடி, ஜூன் 14:  தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. இதற்கு தலைமை வகித்த சப்- கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். அப்போது அங்கு வந்த குலையன்கரிசல் கிராம விவசாய சங்கத்தினர் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: குலையன்கரிசல் விவசாய சங்கம் மூலம் அரசு அனுமதித்த இடங்களில் கரம்பல் சீட்டு பெற்று, தூர்வாரி மண் எடுத்து  வந்தோம். அரசிடம் இருந்து பெறப்பட்ட சீட்டு கடந்த 11ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் எங்களது சங்கம் மூலம் தூத்துக்குடி தாசில்தாரை அணுகினோம். அப்போது அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள தாலுகா அலுவலகத்திற்கு 40 நடை மண் அடிக்க கோரினார்.  நாங்கள் 14 நடை மண் அடித்தோம்.  ஒரு நடை மண்ணுக்கு லாரி வாடகையாக ரூ. 2500 வழங்கப்பட்டது. மற்ற தாலுகா அலுவலகங்களில் 20 நாட்கள் அனுமதி சீட்டு வழங்கும் நிலையில் தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே மண் அள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 12ம் தேதியன்று விவசாய சங்கத் தலைவர் மூலம் தாசில்தாரை அணுகி விவரம் கேட்டபோது முறையாகப் பதிலளிக்காமல்  தலைவரை ஒருமையில் அழைத்து வெளியே போ என கூறியுள்ளார்.  அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்களுக்கு மண் அள்ள அனுமதி சீட்டு 20 நாட்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: