×

தூத்துக்குடி மாவட்ட அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி, ஜூன் 14:  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் சேர தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  மாணவ, மாணவிகள் பள்ளி விடுதி, ஐடிஐ விடுதியில் சேர இம்மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகள் ஜூலை 4ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட விடுதி  காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தூத்துக்குடி  மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கென  மொத்தம் 55 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல்  12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதிகளில்  பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பைச்  சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில்  சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும்  இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி  மாணவ, மாணவிகளுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

10ம்  வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணகளுருக்கு சீருடைகள் வழங்கப்படும். 10ம்  வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணகளுக்கு சிறப்பு வழிகாட்டி  வினா வங்கிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது  ஆண்டு வருமானம்  ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும்  சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் வசிக்கும் இடத்திற்கும் 5 கி.மீ தொலைவு இருத்தல் வேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது.
எனவே, தகுதியுடைய  மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி  காப்பாளர், காப்பாளினியிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக  பெற்றுக்கொள்ளலாம்.  இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்த பின்னர் பள்ளி விடுதி  மற்றும் ஐடிஐ விடுதிகளைப் பொருத்தவரை தொடர்புடைய விடுதி காப்பாளர்,  காப்பாளினியிடம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  அலுவலகத்தில் வரும்  20ம் தேதிக்குள்ளாக விண்ணப்பத்தை வழங்க வேண்டும்.

கல்லூரி விடுதிகளை பொருத்தவரை  சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்,காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜூலை 4ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும்  முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று  பயனடையலாம். மேலும் தகவல்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Government Hostels ,Thoothukudi District ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே...