தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதா? சிஇஓ அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகை

தூத்துக்குடி, ஜூன் 14:  தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜாய்சன், மாவட்டச் செயலாளர் இசக்கிபாண்டி தலைமையில் நடந்த இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இதுதொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் இயங்கும் ஒருசில தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாவட்டத்தில் அதிக அளவில் கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும்  பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.  11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தில் சேர்த்திட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சுதாகர், மாநகர செயலளார் (பொ) சுலேராஜ், மாநகர தலைவர் கார்த்தி, ஒன்றிய தலைவர்கள் விஜய், மாரிசெல்வம், சாத்தான்குளம் கௌதம், பள்ளி மாணவர் ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் ராமமூர்த்தி மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: