×

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் நடுத்தர, பெரு விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, ஜூன் 14: பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில், நடுத்தர மற்றும் பெரு விவசாயிகளும் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4,26,955 சிறு, குறு விவசாய குடும்பங்கள் உள்ளன. இதுவரை 1,95,164 விவசாய குடும்பங்கள் பாரத பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவற்றில், சரியான ஆவணங்கள் அளித்த 1,54,164 குடும்பங்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தொகையாக, இதுவரை மொத்தம் ₹61.66 கோடி நிதி வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருந்திய கிசான் சம்மான் நிதி திட்டத்தில் நடுத்தர மற்றும் பெரு விவசாய குடும்பங்களும் சேரும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர நிலம் தொடர்பான ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், செல்போன் எண் மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை, தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே அறிவித்தபடி, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ₹10 ஆயிரத்துக்கும் அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், வருமான வரி செலுத்துவோர், வக்கீல்கள் இத்திட்டத்தில் பதிவு செய்ய முடியாது. மேலும், ஏற்கனவே இத்திட்டத்தில் பதிவு செய்யாத சிறு மற்றும் குறு விவசாயிகளும், தற்போது பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பதிவு செய்து காலமாகிவிட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாரிசுதாரர்கள் உரிய பட்டா மாறுதல் செய்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...