×

இலவச வீட்டுமனை வாங்கி தருவதாக ₹19 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது நடவடிக்கை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் புகார் மனு

ஆற்காடு, ஜூன் 14: ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக ₹19 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் மனு அளித்தனர். ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நேற்று முன்தினம் துவங்கியது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இந்நிலையில், 2வது நாளான நேற்று காலை திமிரி உள்வட்டத்தை சேர்ந்த திமிரி, மருத்துவம்பாடி, விலாரி, விளாப்பாக்கம் மற்றும் கலவை உள்வட்டத்தை சேர்ந்த சிறுவிடாகம், கலவை, மேல்நெல்லி, கீழ்பாடி, பழையனூர் உட்பட 17 கிராமங்களில் இருந்து 74 மனுக்களை அளித்தனர். மனுக்களை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் வேணுசேகரன் பெற்றுக்கொண்டார்.

அப்போது, திமிரி அடுத்த ஆனைமல்லூரிலிருந்து பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆனைமல்லூரில் இந்து ஆதிதிராவிடர்கள் 119 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனு அளித்தனர். மேலும், கடந்த 2014ம் ஆண்டு 119 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி ஆனைமல்லூரில் வசிக்கும் எஸ்.ராஜாமணி, கார்த்தி, போஸ்ட்மேன் ஜெயபால் ஆகியோர் ₹19 லட்சம் பெற்றனர். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா பெற்று தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜமாபந்தியில் ஆற்காடு தாசில்தார் வத்சலா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சரஸ்வதி, மண்டல துணை தாசில்தார் செந்தில், வருவாய் ஆய்வாளர் சத்யா, கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Tags : Officer ,Adi Dravidar Welfare ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...