திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம சுவாமி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மசுவாமி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 108 வைணவ திருத்தலங்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஒன்று. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோயிலில் மேற்கு நோக்கி யோக நரசிம்மர் சன்னதி அமைத்துள்ளது. ஆண்டுதோறும் நரசிம்ம சுவாமிக்கு பிரமோற்ச விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்  தொடர்ந்து, இரவு 7.30 மணியளவில் புன்னைமர வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.  இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று சேஷ வாகனம், சிம்ம வாகனத்தில் உற்சவர் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை கருட சேவையும், 16ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை, 17ம் தேதி நாச்சியார் திருக்கோலமும், யோகநரசிம்ம திருக்கோலமும் நடைபெற உள்ளன. 18ம் தேதி சூர்ணாபிஷேகம், தங்க சப்பரம், ஏகாந்த சேவை, யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும். 19ம் தேதி சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி, 3 நாட்களுக்கு இரவு 8 மணிக்கு புஷ்ப பல்லக்கு நிகழ்வு நடைபெறுகிறது.

Related Stories: