25 ஆண்டாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை ஏரிகள், வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு

ஓமலூர், ஜூன் 13: கருப்பூரில் உள்ள ஏரிகள், வாய்க்கால்கள், மயானங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற 25 ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனுக்கள் கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஓமலூர் தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தி நடந்து வருகிறது. நேற்று கருப்பூர் உள்வட்டத்தில் உள்ள கருப்பூர், வெள்ளைக்கல்பட்டி, பாகல்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தேக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வரவு செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

இதனையடுத்து, கருப்பூர் பேரூராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுசிந்திரகுமார் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கருப்பூர் பேரூராட்சியில் உள்ள ஏரிகள், அதற்கான நீர்வழிப் பாதைகள், கருப்பூர் பேரூராட்சிக்கு சொந்தமான சுடுகாடுகள் என அனைத்தும் கடந்த 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, 25 ஆண்டுகளாக ஜமாபந்தியில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என உறுதி அளிக்கும் அதிகாரிகள், பின்னர் கண்டு கொள்வதே இல்லை. இதனால், ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், கருப்பூர் ஏரிக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories: