50 சதவீத மானியத்தில்

திருச்சி, ஜூன் 13: திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குழாய் கிணறு, பம்ப் செட், நீர்ப்பாசன குழாய், தரைநிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டம் (பிஎம்கேஎஸ்ஒய்) ஒரு துளி நீரில் அதிக பயிர் (பிடிஎம்சி) எனும் மத்திய மாநில அரசு திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டிற்கான துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டம் (எஸ்.டபள்யு.எம்.ஏ) 1.10.2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் குழாய் கிணறு, துளைக்கிணறு அமைத்தல், நீர் இறைப்பதற்கு ஆயில் இன்ஜின், மின்மோட்டர் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் பண்ணைக்கு மிக அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர்குழாய் அமைத்தல், தரைநிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல் போன்றவற்றிற்கு 50 சதவீதம் மானியம் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

அதன்படி, குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைப்பதற்கு பாதுகாப்பான குறுவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மொத்த செலவுத்தொகையில் 50 சதவீதம் (ரூ.25,000க்கு மிகாமலும்), டீசல் பம்பு செட், மின் மோட்டார் பம்ப் செட் நிறுவுவதற்கு 50 சதவீதம் அல்லது ரூ.15,000க்கு மிகாமலும், பாசனக்குழாய் அமைப்பதற்கு 50 சதவீதம் அல்லது ரூ.10,000க்கு ஏக்கருக்கு மிகாமலும் தரைநிலை நீர்தேக்கத்தொட்டி அமைப்பதற்கு ஒரு கன மீட்டர் கொள்ளளவு ரூ.350 வீதம் ஒரு பயனாளிக்கு ரூ.40,000 மிகாமலும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த 4 பணிகளில் குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்கும் பணிக்கான மானியம் திருச்சி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள பாதுகாப்பான குறு வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அன்பில், கல்லக்குடி, லால்குடி, புள்ளம்பாடி, வாளாடி, வளநாடு, சிறுகாம்பூர், ஆமூர், அந்தநல்லூர், குழுமணி, சோமரசம்பேட்டை, ரங்கம், நவல்பட்டு, திருவெறும்பூர், வேங்கூர், திருச்சி (வடக்கு), திருச்சி (தெற்கு) ஆகிய குறு வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் இதர 3 பணிகள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையிலும் இத்திட்டம் வழிவகுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் 1.10.2018 முதல் நுண்ணீர் பாசன அமைப்புகளான சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைநீர் தெளிப்பான் போன்ற அமைப்புகளை கட்டாயம் நிறுவ வேண்டும். அதற்கு விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர்(அ)தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி நுண்ணீர் பாசன அமைப்பினை தங்கள் வயல்களில் நிறுவுவதற்கு விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிறகு வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் இயங்கும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பணி ஆணை பெற்று, விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளவேண்டும். இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மானியத்தொகை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரிடையாக வரவு வைக்கப்படும்.எனவே, விவசாயிகள் நுண்ணீர் பாசன அமைப்பினை தங்கள் வயல்களில் நிறுவி துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் பணிக்கான மானியத் தொகையினை பெற்று பயன்பெறலாம். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: