பயணிகள் அதிர்ச்சி பேராவூரணி பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆய்வு

பேராவூரணி, ஜூன் 13: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.1.89 லட்சம் மதிப்பில் மா, பலா, மாதுளை உள்ளிட்ட பழக்கன்றுகள் நடப்பட்டு வருவதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். பின்னர் வேலைக்கான வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா, ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.இதைதொடர்ந்து ஆண்டிக்காடு ஊராட்சியில் தொகுப்பு வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின்கீழ் உதயம் உடையான் கிராமத்தில் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.7 லட்சம் மதிப்பில் 14 வீடுகள் பழுது பார்க்கும் பணிகள் நடப்பது, மேலும் அப்பகுதியில் ரூ.8.3 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிட பணியை பார்வையிட்டார். பின்னர் இரண்டாம்புலிக்காடு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.1.7 லட்சம் மதிப்பில் வீடு கட்டுமான பணி நடந்து வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.இதையடுத்து குருவிக்கரம்பை ஊராட்சியில் முருகானந்தம், சுப்பையா என்பவரது தென்னந்தோப்பில் கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்களுக்கு பதிலாக வேளாண்மைத்துறை சார்பில் புதிதாக வழங்கப்பட்ட தென்னங்கன்று, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் மூன்றுக்கு மூன்று என்ற அளவில் குழி தோண்டி நடப்பட்டு வருவதை பார்வையிட்டார். மருங்கப்பள்ளம் ஊராட்சியில் தன்னிறைவு திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தை பார்வையிட்டார்.

Advertising
Advertising

அதைதொடர்ந்து பேராவூரணி ஒன்றியம் களத்தூர் ஊராட்சி நாடங்காடு பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.19.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவது, செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில் கிழக்கு ஆற்றங்கரை சாலை ரூ 82.20 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டு வருவது, ரூ.1.8 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டார்.ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேதுபாவாசத்திரம் கோவிந்தராஜன், கிருஷ்ணமூர்த்தி, பேராவூரணி சடையப்பன், செல்வம், உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறியாளர்கள் அருண், சுரேஷ், பாலசுப்பிரமணியன் உடனிருந்தனர்.

Related Stories: