ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட நகைகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஈரோடு,  ஜூன் 13:  ஈரோடு செல்லும் ரயில்களில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட ரூ.15 லட்சம்  மதிப்புள்ள நகை, செல்போன், லேப்டாப் ஆகியவை உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.  ஈரோடு, சேலம், கோவை வழியாக செல்லும் ரயில்களில் ஈரோடு ஹோம் சிக்னல் மற்றும் மாவேலி பாளையம்  அருகே கடந்த சில மாதங்களாக ஜன்னல் ஓரம் பயணிக்கும் பெண்களை குறிவைத்து  மர்மநபர்கள் நகைகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, ரயில்வே டிஜிபி  சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்டதாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மொகல் தாலுகா  பகுதியை சேர்ந்த பாலாஜி சங்கர் சின்டே (50), தானாஜீ மன்மத் (20), சுனில்  மன்மத் (21), பப்பு ஈஸ்வர் பவர் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் கோவை ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் விசாரணை நடத்தி அவர்கள் அளித்த தகவலின் பேரில் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் சென்று 27  பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

Advertising
Advertising

இதேபோல், கோவை, சேலம் ரயில்வே போலீஸ்  ஸ்டேஷன்களில் பதிவான நகை, செல்போன் திருடியதாக பதிவு செய்யப்பட்ட  வழக்குகளில், 74 வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 54 பவுன் நகை, 59 ஸ்மார்ட் போன்,  லேப்டாப் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள  தனியார் ஓட்டலில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ரயில்வே எஸ்பி ரோகித்  நாதன் ராஜகோபால் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ரயில்வே டிஐஜி  பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, நகை  மற்றும் செல்போன்களை வழங்கினார்.

Related Stories: