விபத்தை ஏற்படுத்தி செல்லும் வாகனங்களை கண்டறிய 11 அதிநவீன கேமரா

ஈரோடு, ஜூன் 13:  ஈரோடு மாநகரில் சாலை விபத்தை ஏற்படுத்தி தப்பிச் செல்லும் வாகனங்களை கண்டறிய 11 இடங்களில் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா பெருத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 11 இடங்களில் வாகன பதிவு எண்ணை கண்காணிக்கும் (ஏஎன்பிஆர்) கேமரா மற்றும் சிசிடிவி கேமரா நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள ஏஎன்பிஆர் கேமராவை எஸ்பி சக்தி கணேசன் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், ஈரோடு டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், டிராபிக் டிஎஸ்பி எட்டியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து எஸ்பி சக்தி கணேசன் கூறியதாவது:

வாகன விபத்துகளை ஏற்படுத்தி தப்பி செல்வோர், குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு தப்பி செல்வோரை கண்டுபிடிக்கும் வகையில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கருங்கல்பாளையம் பகுதியில் ஏஎன்பிஆர் கேமரா பொருத்தப்பட்ட பிறகு நேற்று முன்தினம் ஒரே நாளில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி 28 ஆயிரம் வாகனங்கள் வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கேமரா மூலம் வாகனங்கள் எவ்வளவு கி.மீ. வேகத்தில் செல்கிறது என்பதையும் கண்காணிக்க முடியும். இந்த கேமராக்களின் பதிவுகளை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். பதிவாகும் வாகன எண் மூலம் வாகன உரிமையாளர், முகவரி, போலி நம்பர் பிளேட் உள்ளிட்ட விவரங்களை கண்டறிய  ஏஎன்பிஆர் கேமரா பெரும் உதவியாக இருக்கும். தற்போது, இந்த கேமரா ஈரோடு மாநகரில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. படிப்படியாக பிற சப்-டிவிசன்களிலும் பொருத்தப்படும்.ஹெல்மட் அணியாமல் செல்பவர்களை, போக்குவரத்து விதிமுறை மீறுபவர்களையும் இந்த கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்க முடியும். ஹெல்மெட் அணியாமல் டூவீலர் இயக்குவதாக தினமும் மாவட்டத்தில் சராசரியாக 300 வழக்குகள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.

தினமும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 2500 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறை, ஆர்டிஓ அலுவலகத்துடன் இணைத்த பின் திருட்டு போன மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகன எண்கள் இந்த கேமராவில் பதிவு செய்யப்படும். கேமராவில் பதிவு செய்யப்பட்ட வாகன எண்கள் கொண்ட வாகனங்கள் சென்றால், அவர்களை பிடிக்க ஏதுவாக அமையும். இது குற்ற தடுப்பு சம்பவங்கள், வாகன விபத்துகளை கண்டறிய, வாகனங்கள் கடத்துவதை உடனடியாக கண்காணித்து பிடிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.'

Related Stories: